Ads

Monday, March 25, 2013

உப்பு


வீட்டை விட்டு எல்லோரும் போய்விட்ட இந்த 10 மணி காலை, ஒரு பெருமழை பெய்து ஓய்ந்த தோற்றத்தை வீட்டிலேயும், தன் மனதிலேயும் உண்டு செய்தது. காலையில் காஃபி குடித்ததோடு சரி, இன்னும் டிபன் ஆகவில்லை, பசித்தாலும் சாப்பிடும் எண்ணமே இல்லை.

எப்படி இருக்கும்? சாப்பாட்டை பார்த்தாலே சட்டென்று உப்பின் ஞாபகம்தான் வருகிறது. சமையலறைக்கு போனாலுமே உப்பின் ஞாபகம்தான். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் எப்படியாவது கூடிவிடுகிறது, இல்லையாவது குறைந்துவிடுகிறது. ஆனால் சரிக்கு சரியாய் இல்லை. கொஞ்ச நாட்களாகத்தான் இப்படியென்றாலும், இன்று எல்லோருமே டிபனை புறக்கணித்ததால் மிகவும் சங்கடப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதுவும், உன் கை ரொம்ப பெரிசுங்கறதனால, இப்படியா உப்பை கொட்டி வைப்ப, இதுல என்று தட்டை தள்ளிவிட்டு போனபோது சற்று ஆத்திரமாய் வந்தாலும்,அதன் நிவர்த்திக்கான வழி தெரியவில்லை.

திருப்பி திருப்பி கையைப் பார்த்துக்கொள்கிறேன். பெரிசாக ஒன்றும் தெரியவில்லை, சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. கையையே ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்ததால், போட்டிருந்த மோதிரமும் கண்ணுக்குப் பட்டது, இவ்வளவு நாளாய் விரலோடு விரலாகத்தான் இருக்கிறது. இன்றுதான் அதன் நுட்பமான வேலைப்பாடுகள் கூடத் தெரிகிறது. சின்ன சின்ன உருண்டையாக, வளையங்களைக் கொண்டு, வளையங்களின் இடுக்கில் அழுக்கு ஏறிப்போயிருக்கிறது. சுத்தம் செய்ய வேண்டும் என்று அந்தக்கணம் தோன்றியது.ஆனால் அடுத்த கணமே உப்பின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது. கை சுட்டாலும் பரவால்லை என்று சுட சுட கையில் ஊற்றி, சுவைத்துப் பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பது போலத்தான் தோன்றுகிறது. இது போன்று உப்பின் சுவை பார்ப்பது கடந்த சில நாட்களாகத்தான். அதற்கு முன்னரெல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருவேளை நாக்கில் பிரச்சினை இருக்குமோ. நாக்கைப் பார்த்தால் என்ன. சட்டென்று கண்ணாடியின் அருகே போய், நாக்கைப் பார்த்தேன். இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி பார்த்து, நாக்கை நீட்டிப் பார்த்து என்று செய்ததில் உமிழ்நீர் சுரந்ததுதான் மிச்சம், வேறொன்றும் பலனில்லை.

ச்சே, உப்பு என்ற ஒன்றை கண்டுபிடிக்காமலேயே இருந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும், அப்படியே அதனதன் போக்கில் சாப்பிட்டு நாக்கும் பழக்கப்பட்டு போயிருக்கும், இப்படியே யோசனை நீண்டதில், தான் எப்பவாவது உப்பில்லை என்று உணவை புறக்கணித்திருக்கோமா என்று தோன்றியது.
ஒரு முறை அத்தை வீட்டில் தான் அது நடந்திருக்கிறது. அம்மாவிற்கு பெரும்பாலும் இந்தப்பிரச்சினை வராது, பாட்டிக்கும், அப்பாவின் சத்தத்திற்கு பயந்தே பார்த்துப் பார்த்து சமைப்பாள். ஒரு முறை கூட தப்பிப்போனதில்லை, பிள்ளைகளின் மீது எவ்வளவு கவனம் வைத்திருந்தாலோ, அதே கவனம் உப்பின் மீதும் இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. சாப்பிடும் போது ஒரு முறை கூட உப்பு வைத்திருக்கும் கலம், கூடத்திற்கு வந்ததில்லை. ஆனால் அத்தை வீட்டில் பொடி உப்பை ஒரு சிறிய டப்பாவில் போட்டு, சாப்பாட்டு மேசை மீது எப்போதுமே இருக்கும். ஓட்டலில் வைத்திருப்பதைப் போல.

அத்தைக்கு அவ்வளவாய் சாப்பாடு, சமையல் என்ற விஷயத்தில் ஈடுபாடு இருக்காது, அதற்காகவே விடுமுறை காலங்களில் அத்தை வீட்டுக்கு ஓடிப்போகத்தோன்றும், இங்கே இருந்திருந்தால் இந்தப் பாட்டியின் பேச்சைக்கேட்டு, அம்மாவும் என்னை நை, நை என்று அதைச் செய், இதைச் செய் என்று நைந்துகொண்டிருப்பாள், செய்யவில்லை என்றால் பாட்டி வைதுக்கொண்டிருப்பாள். இந்த தொந்திரவுக்கே, விடுமுறை வரும் ஒரு வாரத்துக்கு முன்னரே அத்தையை வரச்செய்து, அவளோடு தொத்திக்கொண்டு போய்விடுவது. எந்த தொந்திரவும் இல்லாமல், நினைத்ததை செய்துக்கொண்டு பொழுதோட்டுவது என அவையெல்லாம் கார்காலங்கள். அவ்வப்போது அம்மாவை நினைத்துக்கொண்டாலும், அந்த குண்டு பல்பு போட்ட சமையலைறையை நினைத்தால் கொஞ்சம் பயமாகவே இருக்கும்.

அத்தை அனேகமாய் கலந்த சாதம் மாதிரிதான் செய்வாள். அதுதான் சுலபம், ரசம், சாம்பாருன்னு செஞ்சாலும் சாதத்துல போட்டு கலந்துக்கிட்டுதானே சாப்பிடப்போறோம். தோசை சரியாகவே வார்க்கவராது, சப்பாத்தியும் அதே கதைதான். ஓவ்வொரு தோசையும், சப்பாத்தியும் ஒவ்வொரு தோற்றம் காட்டும், சில சமயம் மேப்பில் இருக்கும் சில நாடுகள் கூட அதே மாதிரி சாயலாய் இருப்பதாய் கூட நினைத்துக்கொண்டு சிரிப்பேன். அத்தை கேட்டால் சொல்லிவிடுவதுண்டு, அதற்கு அவளும் சிரித்துக்கொண்டே, எப்படியும் பிச்சு பிச்சு தானே சாப்பிடறோம், எப்படியிருந்தா என்ன, வயிறு ரொம்புதா. அதப் பாரு என்பாள். ரொம்பவும் மெனக்கெட மாட்டாள் சமையலுக்கு எப்பவுமே, மாமாவும் அதே மாதிரி இருந்ததால், அத்தைக்கு இந்த விஷயத்தில் எந்த பிரச்சினையுமில்லை.

கூடுதலாக இவளின் சமையலின் கைத்திறமை கண்டு, சொந்தக்கார கூட்டங்கள் வந்து டெண்ட் அடிப்பதென்பது மிகமிகக் குறைவு. அத்தைக்கு சமையலில் தான் கைத்திறமை இல்லையே ஒழிய, கை வேலைப்பாடெல்லாம் அழகாய் செய்வாள், அவள் எம்ராய்டரி போட்டால் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். அத்தையின் ஓய்வு நேரங்களெல்லாம் எம்ப்ராய்டரிதான், சில பத்திரிக்கைகள் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு பரிசு கூட வாங்கியிருக்கிறாள் இதற்காக. எம்ப்ராய்டரிக்கு நேரம் ஒதுக்குவதற்காகவே சமையலை சீக்கிரம் முடிக்கிறாள் போல என்று கூட தோன்றியது.

மேடம், கொரியர்.......... என்ற கட்டைக் குரல், சட்டென்று நினைவுகளை கலைக்கச்செய்தது. நேரத்தைப் பார்த்தால் 11 மணி என்று காட்டியது. ஏதோ பேங்க்கில் இருந்து வந்த கொரியர், ஸ்டாண்டில் வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு செய்யவே அரைமணி நேரம் பிடித்தது. மறுபடியும் சமையலறை. உப்பு கிலி பிடித்துக்கொண்டது. சாப்பிடத்தோணவில்லை, மீண்டும் ஒரு காபி குடித்துவிட்டு, துணிகளை துவைத்து, காயப்போட மாடிக்கு போனேன். காயப்போடும்போது, அங்கிருந்து மளிகைக்கடை கண்ணில் பட்டது. ஒரு வேளை இவன் தரும் உப்பில் ஏதேனும் ப்ரச்சினையா. அளவாய் போட்டாலும், கரிக்க செய்யும் தன்மையோ. என்ன உப்பு வாங்குகிறோம்,கீழே போய் பார்க்கவேண்டும்.

ச்சே, எங்கே போனாலும் இந்த உப்பு ப்ரச்சினை ஒட்டிக்கொண்டே வருகிறது. பசித்தது, காலையில் சாப்பிடத்தாலோ என்னவோ, தயிர் சாதம் சாப்பிடலாம் என்று தோன்றியது, சாதத்தில் தயிரை விட்டு பிசையும்போது தோன்றியது, உப்பு போடாமல் இன்று சாப்பிட்டால் என்ன, இன்று காலையிலிருந்து என்னோடு ஒட்டிக்கொண்டே வந்து உயிரை வாங்கும் இந்த உப்பு நினைவுக்கு இதுதான் சரியான தண்டனை, உன்னைப் புறக்கணிக்கிறேன் உப்பே என்றபடி தயிர்சாதத்தை வாயில் வைத்தால் என்னவோ போலிருந்தது.
என் பேச்சும், செயலும் எனக்கே சிரிப்பை வரவைத்தாலும், உப்போடு ஒரு வீராப்பு வரத்தான் செய்தது. பாரேன், உப்பு, வீராப்பு என்று, ஆழந்த சிந்தனைகளில் தொடர்பாக வார்த்தைகள் கூட அடுக்கு மொழி போல வந்து விழுகிறது. ம்ஹூம் விடுவதாயில்லை, எப்படியாவது இந்த உப்பில்லா தயிர்சாதத்தை சாப்பிட்டாவேன், இரண்டும், மூன்று வாய், குமட்டிக்கொண்டு வந்தது. கொஞ்சம் ஊறுகாய் வைத்துக்கொள்ளலாமா என்று தோன்றியது, ம்ஹூம், வேண்டாம். உப்பின் அதிக பட்ட பயன்பாடே ஊறுகாய்க்குத்தான். அதற்கு ஒரு துளி உப்பே சேர்த்துக்கொள்ளலாம். 

வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்று பிடிவாதமாய், தட்டை கையிலெடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து டி.வி.யைப் போட்டேன். போட்டவுடனேயே இந்தக் காட்சிதான் ஓடியது, ஒரு பெண்ணும், சமையலறையும்,கலராய் ஏதோ உணவு வகையறாவையும் காண்பித்து, தலைமுடி சீராய், மடிப்பு கலையாத புடவையோடு,முக்கியமாய் வியர்த்து வழியாமல்,தன் நீண்ட நெயில் பாலீஷ் விரல்களால் உப்பை அழகாய் தூவிக்கொண்டிருந்தாள். உடன் ஒரு மெல்லிய இசையும் ஒலித்தது. வாங்குங்கள் அயோடின் நிறைந்த இந்த உப்பை என்று கீச்சுக்குரலில் சொன்னாள். டி.வியை ஆஃப் செய்யவும் தோன்றாமல்,சாப்பிடவும் தோன்றாமல் தயிர் சாதத் தட்டையே வெறித்துக்கொண்டிருந்தேன் நான். பிள்ளைகள் பள்ளிவிட்டு வரும் சத்தம் கேட்டது. மீண்டும் வருமா இந்த உப்பின் யோசனை, இல்லை மீண்டு வருவோமா இந்த உப்பிலிருந்து ? மறுபடியும் உயிரைவாங்கும் இந்த உப்பின் சிந்தனையோடு கையைக் கழுவிக்கொண்டு கதவைத் திறந்தேன்.

No comments:

Post a Comment

ads