Ads

Friday, March 22, 2013

இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்


ஜெனீவா
இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியா உள்பட 25 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. ஓட்டெடுப்பில் பாகிஸ்தான் உள்பட 13 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தன.
அமெரிக்கா தீர்மானம்
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் 47 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காகவும் பொறுப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கொண்டு வந்த அந்த தீர்மானத்தில், இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் எல்லா உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் பெற்று வாழ்வதை அந்த உறுதி செய்ய வேண்டும் என்றும், மனித உரிமைகள் மீறப்படுவதும் நீதித்துறைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களும் ஊடகங்களுக்கு வரும் மிரட்டல்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இது தவிர இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை வலியுறுத்தும் அம்சங்களும் தீர்மானத்தில் இடம்பெற்று இருந்தன.
திருத்தங்கள்
வரைவு தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. கடைசி நேரத்தில் இந்தியாவின் சார்பிலும் சில திருத்தங்கள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீர்மானத்தின் இறுதி வடிவம் நேற்று காலை ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தீர்மானத்தின் மீது பேசிய அமெரிக்க தூதர் எலீன் சாம்பர்லியன்; இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது பற்றிய கவலை அதிகரித்து வருவதாகவும், இதற்கு தீர்வு காணவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த நாட்டின் அரசுக்கு உள்ளது என்றும் கூறினார்.
இலங்கை எதிர்ப்பு
மேலும் தீர்மானத்தின் மீது பல்வேறு நாடுகளின் உறுப்பினர்களும் பேசினார்கள். தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இந்தியாவின் பிரதிநிதி திலீப் சின்ஹா பேசுகையில்; இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய புகார்கள் மீது சுயேச்சையான மற்றும் நம்பகமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார். இலங்கை பிரதிநிதி மகிந்தா சமரசிங்கே பேசுகையில், தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தார். அமெரிக்க தீர்மானம் தங்கள் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதாக உள்ளது என்பதால் அதை நிராகரிப்பதாகவும், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:–
கவலை
இலங்கையில் தீவிரவாதத்துக்கு எதிராக நடைபெற்று வந்த மோதலை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இலங்கையில் போர் முடிந்து 3 ஆண்டு மற்றும் 8 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் மோதல்களும் மனித உரிமை மீறல்களும் நடந்து வருவதாக நாம் பேசுகிறோம். அப்படி இருக்கும் போது இலங்கைக்கு எதிராக இங்கு தீர்மானம் கொண்டு வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இலங்கையில் சமீப காலமாக பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதை அங்கீகரிக்காமல் இலங்கையை பற்றி தவறாக சித்தரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை இலங்கை அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது. இவ்வாறு மகிந்தா சமரசிங்கே கூறினார்.
ஓட்டெடுப்பில் வெற்றி
உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம் உள்ள 47 வாக்குகளில் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக 25 வாக்குகள் கிடைத்ததால் தீர்மானம் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றியது. தீர்மானத்துக்கு எதிராக 13 வாக்குகள் கிடைத்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. ஒரு நாட்டின் பிரதிநிதி வாக்கு அளிக்க முடியவில்லை.
இந்தியா ஆதரவு
இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டைனா, ஆஸ்திரியா, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, ஐவரி கோஸ்ட், செக் குடியரசு, எஸ்டோனியா, ஜெர்மனி, கவுதமாலா, அயர்லாந்து, இத்தாலி, லிபியா, மான்டனோக்ரோ, பெரு, போலந்து, தென்கொரியா, மால்டோவா, ருமேனியா, சியரா லியோன், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்பட 25 நாடுகள் வாக்கு அளித்தன.
 பாகிஸ்தான், காங்கோ, மாலத்தீவு, தாய்லாந்து, ஐக்கிய அரபு குடியரசு, கத்தார், குவைத், ஈக்வடார், இந்தோனேசியா, மவுரிதானியா, பிலிப்பைன்ஸ், உகாண்டா, வெனிசூலா ஆகிய 13 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தன. அங்கோலா, போட்ஸ்வானா, பர்கினாபாசோ, எத்தியோப்பியா, ஜப்பான், கஜகஸ்தான், கென்யா, மலேசியா ஆகிய 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கப்போனும் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினராக உள்ளது. ஆனால் அந்த நாட்டுக்கான ஓட்டுரிமையில் பிரச்சினை இருப்பதால் அந்த நாட்டின் பிரதிநிதி வாக்கு அளிக்க முடியவில்லை.
இனப்படுகொலை
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை போர்க்குற்றங்கள் என்றும் இனப்படுகொலை என்றும் அறிவிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. மேலும் அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த திருத்தங்கள் எதுவும் இடம் பெறாமலேயே அமெரிக்க தீர்மானம் நிறைவேறி உள்ளது.

No comments:

Post a Comment

ads