Ads

Monday, March 25, 2013

காதில் விழுந்து மனதை பாதித்த உரையாடல்

இன்று காலை ரயில் நிறுத்தம், சற்றே மழை நின்றிருந்த நேரம்.ஓட்டமும், நடையுமாக உள்ளே நுழைந்த என்னை சற்றே நிறுத்தி நிதானப்படுத்தியது பின்வரும் உரையாடல்.

இரண்டு முதியவர்கள் மெல்ல படியேறிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஆணுக்கு கொஞ்சம் வயது அதிகமிருக்கலாம். அவரை கை பிடித்து அழைத்து செல்லும் வயதான பெண்மணிக்கு அவரை விட சற்று குறைவான வயது இருக்கலாம்.

பாட்டி: உன்னை உங்க வூட்டுல நல்லா பாத்துக்கறாங்களா.

தாத்தா: ஆம். அதுக்கின்னா. நல்லாதான் பாத்துக்குறாங்கோ.

பாட்டி: ம். ஆமா உங்கிட்ட பணம் இருக்குது. பென்சன் வருது. நல்லாதான் பாத்துப்பாங்கோ. என்ன சொல்லு.

தாத்தா: ஏன் இன்னா

பாட்டி: ம். இருக்க சொல்லோ எல்லா நல்லாதான் இருந்தது. இப்ப நம்மகிட்ட ஒன்னியும் இல்ல. நாய் படாத பாடா இருக்கு. தோ. காலீல இருந்து இந்த மழைல ஒரு டீ த்தண்ணிக்கு விதி இல்ல வூட்டுல. யாரும் இன்னான்னு கேக்கறது இல்ல. இன்னாத்த சொல்றது.
இன்னமும் பேசிகொண்டே நடக்கிறார்கள். அதற்குள் எனக்கு வர வேண்டிய ட்ரெயின் வரவே நான் அவர்களை வேகமாக கடந்துவிட்டேன்.

ஆனால் அந்த உரையாடல் இன்னமும் என் மனதை விட்டு அகலவில்லை. நம்ம வீட்டுல இருப்பவர்களை நாமே கவனிக்காமல் போனால் பின் யார் கவனிப்பார். வீட்டிலுல்ல வயதானவர்கள் மீது இப்படி வெறுப்பை உமிழ எப்படி இந்த சமூகம் கற்றுக்கொண்டது. வயதான பின்னர் அவர்களை நம் பெற்றோர்களாய் பார்க்க மறந்தது ஏன். இப்படியாய் ஏகப்பட்ட கேள்விகள்.

இதெல்லாம் சரியே. ஆனால் கொஞ்சம் "கொசுவர்த்தி" சுத்தி நினைவுகளின் பின்னால் சென்றால், நான் சரியல்ல.

என் அப்பா மிகவும் வயதானவர். மிகவும் என்றால், என்னை அவரோடு பார்ப்பவர்கள் நான் அவரின் பேத்தி என்று சொல்லுமளவுக்கு. எனக்கும் என் அக்காவுக்கும் 17 வயது வித்யாசம். என் அக்காவின் திரும்ணத்தின் போது எனக்கு ஒரு வயதுக்கும் குறைவே.

என் அப்பாவுக்கு வயதான காரணத்தினாலேயே என் பள்ளிக் காலத்தில் மனதளவில் பட்ட வேதனைகள் ஏராளம். எல்லாருக்கும் ப்ராக்ரஸ் கார்டு வாங்க அப்பா வருவார்கள். நான் அவர் வரக்கூடாது என்று அழுவேன். ஏனெனில் அவர் என் ஸ்கூலுக்கு வந்தால் என் சக தோழிகள் என் காது படவே கிண்டல் செய்வது என்னை மிகவும் பாதித்தது. எல்லாவற்றிற்கும் என் அக்காவையே அழைத்து செல்ல நேர்ந்தது.

பள்ளியில், வெளியில் என்று எங்குமே தனித்து விடப்பட்டவளாய் உணர்ந்தேன். பள்ளியில் எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ளமாட்டேன். அதிகம் யாருடனும் பேசமாட்டேன்.
யாரவது அப்பாவுடன் செல்வதைப் பார்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கும். அந்த ரெண்டும் கெட்ட வயது அப்படியோ, என்னால் எதையும் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.
பாதிப்பின் உச்ச கட்டம் அவரை கண்டாலே எனக்கு வெறுப்பாய் வரும்.

இப்படியாக நிறைய பாதிப்புகள். இந்த பாதிப்பெல்லாம் சேர்ந்து ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதை இப்படி முடியும்.

இப்படியாக
எனக்கு இன்சியல் மட்டும் தந்துவிட்டு
எதிலும் என்னுடன் வராமல்
கடைசியில் பாத பூஜைக்கு மட்டும் வந்து
முன்னிற்பாயோ
நீ என் தந்தை
என்று
சபையோர் கூற.

இக் கவிதை எழுதி சில வருடங்கள் கழித்து எனது திருமணம் நடந்தது. என் அப்பா உயிரோடு இருந்தும் பாத பூஜை செய்துக்கொள்ளவில்லை. காரணம் அதற்கு சில மாதங்கள் முன்னர் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது, கண் பார்வை மங்கிவிட்டது. அவரால் எழக் கூட முடியாத உடல்நிலை. அவரை அவரின் உடல்நலம் சரியாய் இல்லாதபோது கூட சரிவர கவனித்துக்கொண்டது கிடையாது. எல்லாம் என் அக்காவே செய்வாள்.(ஆனால் இப்போது நினைத்தால் அழுகையாய் வருகிறது)

அந்தக்கவிதையை கட்டாயம் அவர் படித்திருக்க மாட்டார். அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. ஆனால் அவர் என் திருமணத்திற்கு வரவும் இல்லை. அவர் காலில் விழ்ந்து ஆசி பெரும் நிகழ்வும் வாய்க்கவில்லை.(என் கவிதை எப்படி அவரின் காதில் விழுந்திருக்ககூடும். சே நான் எழுதிய அந்த வார்த்தைகள் .)

இப்போது அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் உயிரோடு இருக்க மாட்டாரா, நான் அவரை நல்லபடியாக பாத்துக்கொள்ள மாட்டேனா என்று ஏங்குகிறேன். நான் ஒரு பாவி அப்பா. எந்த ஜென்மத்திலாவது இதை வாசிக்கும் வாய்ப்பு நேர்ந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா.

No comments:

Post a Comment

ads