Ads

Friday, March 22, 2013

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இத்தாலி அரசு பணிந்தது 2 கடற்படை வீரர்கள் இந்தியா திரும்பினார்கள்



புதுடெல்லி
சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவுக்கு பணிந்த இத்தாலி அரசு, இரு கடற்படை வீரர்களையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தது.
இத்தாலி வீரர்கள்
கேரள மாநிலம், கொச்சி அருகே மீன்பிடித்த இரு மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கப்பல் ஒன்றில் பாதுகாவலர்களாக பணிபுரிந்த மஸ்சிமில்லியனோ லத்தூர், சல்வோடர் குரோனே ஆகிய அந்த வீரர்களும் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வந்தது.இரு வீரர்களும், அந்த நாட்டில் நடைபெறும் தேர்தலில் ஓட்டு போடுவதற்காகவும், ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காகவும் 1 மாத கால பரோலில் இத்தாலி செல்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது. அவர்கள் இருவருக்காகவும், டெல்லியில் உள்ள இத்தாலி நாட்டு தூதர் டேனியல் மன்சினி உத்தரவாதம் வழங்கி இருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
இந்த நிலையில், கடந்த 11–ந்தேதி அன்று இரு கடற்படை வீரர்களும் இந்தியாவுக்கு திரும்ப மாட்டார்கள் என்று இத்தாலி அரசு திடீரென்று அறிவித்ததால், இரு நாடுகளுக்கு இடையேயான ராஜீய உறவில் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. சர்வதேச கடல் எல்லையில் துப்பாக்கிசூடு சம்பவம் நடைபெற்றதால், தங்கள் தங்கள் நாட்டில்தான் விசாரணை நடத்த வேண்டும் என்பது அவர்கள் தரப்பு வாதமாகும்.அதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் இத்தாலி அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், இத்தாலி அரசு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் கடுமையான நடவடிக்கை எடுத்து, இரு வீரர்களுக்கும் உத்தரவாதம் அளித்த இத்தாலி தூதர் வெளிநாடு செல்வதற்கு அதிரடியாக தடை விதித்தது.
இத்தாலி அரசு பணிந்தது
இந்த நடவடிக்கையினால் இத்தாலி அரசு பணிந்து, இரு கடற்படை வீரர்களையும் சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்காக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தது. வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.இரு வீரர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்கு விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவித்து இருந்ததையும் சல்மான் குர்ஷித் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டால் அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க மாட்டோம் என்றும், இந்திய தரப்பில் உறுதி மொழி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
இந்தியா திரும்பினார்கள்
இத்தாலி வீரர்கள் டெல்லி திரும்பியதும் அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும், இத்தாலி தூதர் அலுவலத்தில் தங்கிக்கொண்டு வழக்கு விசாரணையில் பங்கேற்கலாம் என்றும், வாரம் ஒருமுறை டெல்லியில் உள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், சல்மான் குர்ஷித் கூறினார்.இத்தாலி அரசின் முடிவை தொடர்ந்து இரு வீரர்களும் இந்தியாவுக்கு திரும்பி வந்து கொண்டு இருப்பதாக சல்மான் குர்ஷித் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி இரு வீரர்களும் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி திரும்பினார்கள். இத்தாலி நாட்டின் வெளியுறவு துறை துணை மந்திரியும் அவர்களுடன் வந்திருந்தார்.
மன்மோகன்சிங் வரவேற்பு
இத்தாலியின் முடிவை வரவேற்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்கவும் இந்திய நீதித்துறையின் மாண்புக்கு மதிப்பு அளிக்கும் விதத்திலும் இத்தாலி அரசு எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்து இருக்கிறார்.இரு இத்தாலி வீரர்களையும் இந்தியாவுக்கு திரும்ப வைத்திருப்பதில் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கை வெற்றி பெற்று இருப்பதாக, மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சியினர் தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று உரிமை கோருவது பற்றி கேட்டதற்கு, ‘‘அரசின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதற்கு எதிர்க்கட்சியினர் உரிமை கோர விரும்பினால், அதை தான் ஆட்சேபிக்கவில்லை’’ என்று பதில் அளித்தார்.

No comments:

Post a Comment

ads