Ads

Friday, March 22, 2013

கரடியின் பிடியில் பங்கு வியாபாரம் ‘சென்செக்ஸ்’ 91 புள்ளிகள் சரிவு


மும்பை,
பங்கு வியாபாரம் தொடர்ந்து ஐந்தாவது தினமாக வியாழக்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 91 புள்ளிகளை இழந்தது. ஆக, பங்கு வியாபாரம் கரடியின் பிடியில் சிக்கியது.
சீர்திருத்த மசோதாக்கள்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குகூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியதையடுத்து, மத்திய அரசால் பாராளுமன்றத்தில் பொருளாதார சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளதாலும் முதலீட்டாளர்கள் பங்கு முதலீட்டை குறைத்துள்ளனர். ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்ததகம் மந்தமாக இருந்தது.
இதுபோன்ற காரணங்களால் ரியல் எஸ்டேட், மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் பஜாஜ் ஆட்டோ, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா பவர், எச்.டீ.எஃப்.சி. பேங்க், எல் & டி, மாருதி சுசுகி, ஹிண்டால்கோ, டாட்டா ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோ மோட்டோகார்ப், சிப்லா, பீ.எச்.இ.எல்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி. உள்ளிட்ட 19 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. அதேசமயம், பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், விப்ரோ, ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட 11 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. இல்லையென்றால், பங்கு வியாபாரத்தில் அதிக வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கும்.
வர்த்தகம் முடியும்போது ‘சென்செக்ஸ்’ 91.32 புள்ளிகள் சரிந்து 18,792.87 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 19,082.29 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,756.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
தேசிய பங்கு சந்தை
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 35.65 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 5,658.75 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,757.75 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,647.95 புள்ளிகளுக்கும் சென்றது.

No comments:

Post a Comment

ads